இலங்கையில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் Taxpayer Identification Number (TIN) எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ள விஷயம் உங்களிற்கு தெரிந்திருக்கும். எமது அன்றாட வங்கி கொடுக்கல் வாங்கல்கள், வாகன பதிவு மற்றும் காணி கொள்வனவு போன்ற பல தேவைகளுக்கு இந்த TIN எண் இப்போது அவசியமாகி வருகின்றது.
ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்து அல்லது வங்கிகள் மூலமாக உங்களுக்கான TIN எண் உருவாக்கப்பட்டிருந்தாலும், பலருக்கும் தங்களது TIN எண் என்ன என்பது ஞாபகம் இருப்பதில்லை. இதற்காக கொழும்பில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள (Inland Revenue Department – IRD) பிரதான அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச அலுவலகங்களுக்கோ நேரடியாகச் சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்து தான் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இதுவரை இருந்தது.
ஆனால், இப்போது அந்த கவலை தேவையில்லை! IRD திணைக்களம் தனது Digital சேவைகளை மேலும் எளிமையாக்கியுள்ளது. இனி நீங்கள் வீட்டிலிருந்தபடியே, உங்களது ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மூலம் சில நிமிடங்களில் உங்களது TIN எண்ணை ஆன்லைனிலேயே கண்டறிய முடியும்.
இந்த புதிய ஆன்லைன் வசதி எவ்வாறு வேலை செய்கிறது?
உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் OTP (One-Time Password) முறையூடாகவே இந்த சேவை வழங்கப்படுகின்றது. நீங்கள் IRD இல் பதிவு செய்துள்ள மொபைல் எண் (Mobile Number) அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு (Email Address) ஒரு தற்காலிக கடவுச்சொல் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி மிக இலகுவாக உங்களது விபரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் TIN எண்ணை கண்டறியும் எளிய வழிமுறைகள்:
1.இணையத்தளத்திற்குள் நுழையுங்கள்:
முதலில் IRD திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ e-Services இணையப் பக்கத்தில் உள்ள Verify IRD Information பகுதிக்கு செல்ல வேண்டும்.
Link
2.அடையாள அட்டை விபரங்களை உள்ளிடுங்கள்:
அங்கு உங்களது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை உள்ளிட்டு, உங்களது விபரங்களை தேடவும் (Search).
3.OTP குறியீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்:
உங்களது விபரங்கள் திரையில் காண்பிக்கப்படும் போது, உங்களுடைய பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தெரிவு செய்து Generate OTP என்பதை கிளிக் செய்யவும்.
4.TIN எண்ணை சரிபாருங்கள்:
உடனடியாக உங்களது போனுக்கு அல்லது ஈமெயிலுக்கு வரும் OTP குறியீட்டை தளத்தில் உள்ளீடு செய்து வெரிஃபை (Verify) செய்வதன் மூலம், உங்களுடைய ஒரிஜினல் TIN எண்ணை நீங்கள் திரையிலேயே பார்த்துக்கொள்ள முடியும்.
முக்கிய குறிப்பு: ஒருவேளை உங்களுடைய தற்போதைய மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி IRD சிஸ்டத்தில் புதுப்பிக்கப்படவில்லை என்றால், உங்களால் ஆன்லைனில் OTP ஐப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் IRD இன் பொதுவான உதவி எண்களைத் தொடர்பு கொண்டு விபரங்களை இற்றைப்படுத்த (Update) வேண்டியிருக்கும்.
இந்த புதிய e-Services முறையானது நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், தேவையற்ற அலைச்சல்களையும் தவிர்க்கின்றது. நீங்களும் இதுவரை உங்களது TIN எண்ணை குறித்து வைக்க தவறியிருந்தால், உடனடியாக இந்த ஆன்லைன் வசதியை பயன்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
