வாழ்க்கை கொடுத்த 'வாட்ஸ் அப்'!- 10 மணி நேர போராட்டத்துக்குப் பின் மலையிலிருந்து இளைஞர் மீட்பு

Share or Print this:

WhatsApp பெங்களூரில் மலை ஏறும் போது தவறி விழுந்த இளைஞரை மீட்பு படையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு,’வாட்ஸ் அப்’ உதவியால் உயிருடன் மீட்டனர்.

டெல்லியை சேர்ந்த கவுரவ் அரோரா(24) மற்றும் அவரது நண்பர் பிரியாங்க் ஷர்மா(25) இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.கிருஷ்ணராஜ புரத்தில் ஒரே அறையில் தங்கி இருக்கும் இவர்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் பெங்களூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள மதுகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.அப்போது மதுகிரி மலையின் உச்சியில் ஒரே கல்லில் ஆன‌ 40 அடி உயர பாறையை அடையும் முயற்சியில் மலை ஏறினர்.

மதிய வேளையில் மலை ஏற ஆரம்பித்ததால் அதிக வெப்பத்தின் காரணமாகவும், களைப்பின் காரணமாகவும் பிரியாங்க் ஷர்மாவால் தொடர்ந்து ஏற முடியவில்லை.எனவே அவர் தன்னுடைய நண்பர் கவுரவ் அரோராவிடம், ‘இனிமேல் என்னால் ஏற முடியாது’ என்று கூறி பாதியிலே மலையேறும் முயற்சியை கைவிட்டுள்ளார்.

கவுரவ் தனியாக தொடர்ந்து ஏறியுள்ளார். கைகள் வியர்த்து ஈரமான‌தால் அவர் பாறையை பிடிக்கும் போது வழுக்கியது. உயரமான இடத்தில் இருந்து உருண்டு விழுந்த அவர் அங்கிருந்த சிறு குட்டையில் இருந்த சகதியில் விழுந்துள்ளார். மாலை 6 மணி ஆனபோதும் கௌரவ் திரும்பி வராததால் பிரியாங்க் மதுகிரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மதுகிரி போலீஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருள் சூழ்ந்த மதுகிரி மலையில் தீப்பந்தங்களுடன் உள்ளூர்வாசிகளும் கவுரவ் அரோராவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்பு படையினரும், பிரியாங்க் ஷர்மாவும் கவுரவ் அரோராவை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றனர். மலை சூழ்ந்த பகுதி என்பதால் அவருடைய செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது.

உயிர் காத்த ‘வாட்ஸ் அப்’

இந்நிலையில் இரவு 8 மணி அளவில் பிரியாங்க் ஷர்மாவின் அலைபேசிக்கு கௌரவ் ‘வாட்ஸ் அப்’ மூலமாக அனுப்பிய 3 புகைப்படங்கள் வந்தன.

அந்த புகைப்படங்களின் மூலமாக கவுரவ் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிந்து, மீட்பு படையினர் திங்கள்கிழமை அதிகாலை 2.15 மணி அளவில் அவரை பள்ளத்தில் இருந்து மீட்டனர். கை, கால் என உடல் முழுவதும் காயமடைந்திருந்த அவரை மதுகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படாததால் திங்கள் கிழமை மாலை கவுரவ் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தினங்களாக சிகிச்சைபெற்ற வந்த அவர் நலமடைந்துள்ளார். அவர் வியாழக்கிழமை (இன்று) வீடு திரும்புகிறார்.

இந்த விபத்து குறித்து கௌரவ் அரோராவின் நண்பர் பிரியாங்க் ஷர்மா கூறுகையில்,” மாலை 3.45 மணி அளவில் கவுரவ் உயரமான இடத்தில் இருந்து விழுந்திருக்கிறார்.பாறைகளில் உருண்டு விழுந்ததில் அவருடைய செல்போன் கீழே விழுந்து பழுதாகிவிட்டது.இதனால் அவர் பேசுவது எங்களுக்கும், நாங்கள் பேசியது அவருக்கும் சரியாக கேட்கவில்லை.மேலும் அங்கு சரியாக நெட்வொர்க் இல்லாததால் உடனடியாக அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

இந்நிலையில் அவர் தான் இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’ மூலமாக அனுப்பினார்.அதன் மூலமாகவே கௌரவ் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டோம்.10 மணி நேரமாக மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட போதும்,’வாட்ஸ் அப்’ இல்லாவிடில் என்னுடைய நண்பனை உயிருடன் மீட்டிருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்”என்றார்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *